கோவை:
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா, கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமை தாங்கினார். அருண்குமார் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். ஓ.கே.சின்ராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஓ.பி.எஸ் . அணி பலவீனமாக இருக்கிறது என்பதை போல சில ஊடகங்களும் சித்தரிக்கின்றன. அ.தி.மு.க. வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் நம் பக்கம் தான் உள்ளனர். இன்றைய ஆட்சியாளர்களிடம் 122 எம்.எல்.ஏ.க்களும் 2,417 நிர்வாகிகளும் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்ந்தால் அந்த 2417 பேரும் ‘ஜீரோ’ ஆகி விடுவார்கள்
அ.தி.மு.க. மக்களின் இயக்கமாக இருக்க வேண்டும். எந்த ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். மக்கள் விரோத திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் விரும்பியது இல்லை. இன்றைய ஆட்சியாளர்கள் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் மற்றும் எண்ணங்களை பற்றி கவலைப்படாமல் உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு அனைத்து அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு மிரட்கிற பாணியில் தேவையில்லாமல் விவாதத்திற்கு கொண்டு போய் மக்கள் முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டனர்.
இதற்கு முடிவு கட்டுவதற்காக ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அம்மாவின் ஆட்சி வெகுவிரைவில் வரும்.
இன்றைக்கு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்துள்ளது என்ற எண்ணத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பல நாடகங்களை நடத்தி வருகிறார். மக்களை நம்ப வைத்து திசைதிருப்பி விடலாம் என நினைக்கிறார். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்திய நாடகங்களை போன்று இப்போது மனித சங்கிலி போன்ற நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு போன்ற துரோகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். காவிரி பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்றவற்றில் கருணாநிதி தனது கடமையை செய்ய தவறி விட்டார். தற்போது நீட் தேர்வு பிரச்சினையில் ஸ்டாலின் நாடகங்களை நடத்தி வருகிறார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக மாணவர்களுக்காக மத்திய அரசிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகளை தமிழக அரசு சரியான முறையில் கையாளவில்லை.
ஜல்லிக்கட்டு பிரச்சினை, சென்னை குடிநீர் பிரச்சினை, வர்தா புயல் ஆகியவற்றில் நாங்கள் சரியான முறையில் செயல்பட்டு அவற்றிக்கு தீர்வு கண்டோம். எனவே யார் ஆட்சியில் இருந்தால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்கள் என்று மக்கள் எடை போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவு பெருகுகிறது.
நாங்கள் தொடங்கி உள்ள தர்மயுத்ததிற்கு பொது மக்களும், இளைஞர்களும் மற்றும் மாணவர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2011 தேர்தலின் போது ஜெயலலிதா வ.உ.சி. பூங்கா கூட்டத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அந்த கூட்டம் தான் அரசியலில் திருப்புமுனையாக விளங்கி அவர் முதல்-அமைச்சர் ஆவதற்கு அச்சாரமாக அமைந்தது. எனவே இன்று நடக்கும் கூட்டமும் வர இருக்கிற அரசு அம்மா அணியின் அரசாக அமையும் கூட்டமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மைத்ரேயன் எம்.பி., மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், கே.பாண்டியராஜன், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மேயர்கள் மலரவன், கணபதி ராஜ்குமார், நடிகர் ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ் வரி,
வசந்தாலயா மோகன்ராஜ், கோகுலம் தங்கராஜ், வேல்முருகன், ராஜா ராமச்சந்திரன், முத்துக்குமார், செந்தில் குமார், ஹரிஸ் கோபால், ஹக்கீம், எம்.வினோத், தம்பு என்ற மவுனசாமி, குனியமுத்தூர் பகுதி தலைவர் ராசா கவுண்டர், லாலி ரோடு ராதா, முன்னாள் சிங்காநல்லூர் பகுதி செயலாளர் போனஸ் பாபு, செந்தில்குமார், சிவக்குமார், சிங்கை பார்த்திபன், பிரசாத், வேல்முருகன், ஆவடி வில்சன், நிக்கோலஸ், விமல், ஜான், நந்தகுமார், பி.கே.நாகராஜ், கிட்டுசாமி, கே.ஏ.செல்வராஜ், யு.எஸ்.ராஜேந்திரன், எஸ்.எம்.ரவிக்குமார், பாலாஜி, மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.