செய்திகள்

ஊட்டியில் பலத்த மழை: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காட்டேரி பூங்கா என்ற இடத்தில் ராட்சத மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு வடக்கு கிழக்கு பருவமழை தொடங்கியது. கோத்தகிரியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய கனமழை விடியவிடிய வெளுத்து வாங்கியது.

கோத்தகிரி, கொடநாடு, அரவேனு, சோலூர் மட்டம், கீழ்கோத்தகிரி, அலக்கரை, கொலக்கம்பை ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களில் கணிசமாக நீர் மட்டம் உயந்துள்ளது. அரவேனு கேத்தரின் நீர் வீழ்ச்சி, கொடநாடு நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி ஆகிய பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

இதேபோன்று குன்னூர் பகுதியில் நேற்று இரவு சாரல் மழையுடன் பருவமழை தொடங்கியது. அதிகாலை முதல் கனமழை பெய்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா என்ற இடத்தில் இருந்த ராட்சத மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இது தவிர மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.

குன்னூரில் 46 மி.மீட்டரும், கே.பிரிட்ஜில் 21 மி.மீட்டரும், கேத்தியில் 14 மி.மீட்டரும், கோத்தகிரியில் 25 மி.மீட்டரும், ஊட்டியில் 1.20 மி.மீட்டரும், அப்பர் பவானியில் 7 மி.மீட்டரும், ஏமரால்டில் 9 மி.மீட்டரும், அவலாஞ்சி பகுதியில் 5 மி.மீட்டரும், கொத்தை பகுதியில் 65 மி.மீட்டரும், கிண்ணக்கொரையில் 48 மி.மீட்டரும், கொடநாடு பகுதியில் 8 மி.மீட்டரும், பர்லியார் பகுதியில் 23 மி.மீட்டரும் கொட்டியது. மாவட்டத்தில் நேற்று 272 மி.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் நேற்று முதல் வடக்கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. 2-வது நாளான இன்றும் மழை பெய்தது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலை, ஆனைமலை, பல்லடம், வால்பாறை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.