செய்திகள்

கோடை விழாவையொட்டி ஊட்டி மலர் கண்காட்சி மே 18-ந்தேதி தொடக்கம்

கோடை விழாவையொட்டி இந்த ஆண்டு 122-வது மலர் கண்காட்சி ஊட்டியில் வருகிற மே மாதம் 18-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் கடும் வெப்பம் நிலவினாலும் ஊட்டியில் குளுகுளு சீதோஷ்ண நிலை காணப்படும். இதை அனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வார்கள்.

கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு 122-வது மலர் கண்காட்சி வருகிற மே மாதம் 18-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் முதல் கட்டமாக சென்னை ரேஸ் கிளப் சார்பில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று குதிரை பந்தயம் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நடக்கிறது.

அதனை தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழா, தேயிலை சுற்றுலா விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122-வது மலர் கண்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் தலைமை தாங்கினார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 10-வது காய்கறி கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் 12 மற்றும் 13-ந் தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சியும், கூடலூரில் 11, 12 மற்றும் 13-ந் தேதிகளில் 8-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சியும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 18, 19 மற்றும் 20-ந் தேதிகளில் சர்வதேச புகழ்பெற்ற 122-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் 60-வது பழக்கண்காட்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் நடைபெறும்.

மேலும் சுற்றுலாத்துறையின் சார்பாக நடைபெற உள்ள கோடை விழா நிகழ்ச்சிகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். மேலும் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சியில் சிறப்பான மலர் அலங்காரங்கள் அமைப்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விழாவுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூந்தொட்டிகளில் செடிகள் நன்கு வளர ஆரம்பித்துள்ளது. இந்த செடிகளில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் பூக்கள் பூக்க தொடங்கி விடும். இதேபோல் ரோஜா பூங்காவிலும் கவாத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதிலும் ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து பூக்கள் பூக்க தொடங்கி விடும். இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் கோடை விழாவையொட்டி பராமரிப்பு பணி நடந்து வருகிறது. #tamilnews