திருவனந்தபுரம்:
கேரளாவில் நிறுவனங்கள், வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். சரிதாநாயருக்கு அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த உம்மன்சாண்டி மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள், அரசு அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் சரிதாநாயருக்கு சலுகை காட்டுவதற்காக அவரை பாலியல் ரீதியாகவும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகார் எழுந்தது.
இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் 1073 பக்க அறிக்கையை சமீபத்தில் கேரள சட்டசபையில் முதல்- மந்திரி பினராய்விஜயன் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் உம்மன்சாண்டி உள்பட பலர் மீது மோசடிக்கு உடந்தை, பாலியல் குற்றச்சாட்டு போன்றவை சுமத்தப்பட்டு இருந்தது. இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த பிரச்சினை பற்றி உம்மன்சாண்டி திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சோலார் பேனல் மோசடி பற்றி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை கமிஷன் அறிக்கை பாரபட்சமாக உள்ளது. ஜெயிலில் இருந்த போது சரிதாநாயர் எழுப்பியதாக கூறப்படும் கடிதம் 21 பக்கத்தில் இருந்ததாக முன்பு கூறப்பட்டது. ஆனால் விசாரணை கமிஷன் அறிக்கையில் அந்த கடிதம் 25 பக்கம் கொண்டதாக எப்படி மாறியது?
அதே போல அந்த கடிதத்தில் எனது பெயர் இல்லை என்று விசாரணை கமிஷன் முன்பு ஒரு சாட்சி கூறி இருந்தார். தற்போது அந்த கடிதத்தில் எனது பெயர் இருப்பதாக சிவராஜன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது எப்படி? இந்த அறிக்கையின் சில பக்கங்களில் சிவராஜனின் கையெழுத்து இல்லை. அதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.
மேலும் சோலார் பேனல் மோசடி புகார் தொடர்பாக என்னை மிரட்டியவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதையும் நிரூபிப்பேன் அதுவரை பொறுத்திருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.