செய்திகள்

சோலார் பேனல் மோசடியில் உம்மன் சாண்டி என்னை சிக்க வைத்தார்: சரிதாநாயர் பேட்டி

சோலார் பேனல் வழக்கை பொறுத்தவரை நான் முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டியால் சிக்க வைக்கப்பட்டேன் என்று சரிதா நாயர் கோவை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதாநாயர் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவிலும் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம். 6 கோர்ட்டில் நடந்து வருகிறது.

இன்று விசாரணைக்காக சரிதா நாயர் ஆஜரானார். ஆனால் சாட்சிகள் வராததால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8-ந்தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ராஜவேலு ஒத்திவைத்தார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது-

கேரளாவில் நடைபெற்ற பல கோடி ரூபாய் வரையிலான சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கு விசாரணை முடிய நீண்ட நாட்களாகும்.

மேலும் அந்த விசாரணை கமி‌ஷன் அதிகாரிகள் கிரிமினல், சிவில், லஞ்ச ஊழல் என தனி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை நான், முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டியால் சிக்க வைக்கப்பட்டேன்.

வியாபார ரீதியாக அரசியல் வாதிகளை அணுகிய போது நான் ஏமாற்றப்பட்டேன். நடிகை பாலியல் வழக்கை பொறுத்தவரை ஒரே துறை சார்ந்த போட்டியில் ஏற்பட்டது. ஆனால் என் வழக்கை பொறுத்தவரை பொதுமக்களில் ஒருவரான என்னை போன்றவர்கள் அரசியல்வாதிகளை நம்பி வியாபாரத்துக்கு அணுகிய போது ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்.

எனவே இந்த 2 வழக்குகளும் வெவ்வேறானவை. எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது.

சோலார் வழக்கில் உம்மன் சாண்டி உள்பட தவறு செய்த அனைவருக்கும் தண்டனை கிடைக்கும். கன்னியாகுமரியில் என்னால் தொடங்கப்பட்டுள்ள தொழில் நிறுவனத்துக்கு காங்கிரஸ் சார்பில் புகார் அளித்து பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக வரும் இது போன்ற பிரச்சினைகளை நான் பொருட்படுத்தப் போவதில்லை. இந்த வழக்கில் என் வாழ்க்கையே நாசப்படுத்தி விட்டார்கள். எனவே நான் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன்.