திரிவேந்திர சிங் ராவத் 
செய்திகள்

‘பசு மாடுகள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன’ - -பாரதிய ஜனதா முதல்-மந்திரி பேச்சு வைரலாகிறது

உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா முதல்-மந்திரி டேராடூனில் நடந்த விழா ஒன்றில் பசு மாடுகள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன என பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

டேராடூன்:

அரசியல்வாதிகள் ஏதாவது ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்குவது நமது நாட்டில் வழக்கமாகி வருகிறது.

அந்தவகையில் இப்போது சர்ச்சையில் சிக்கி இருப்பவர், உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத்.

அவர் டேராடூனில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று பேசுகையில் பசு மாடுகள் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறினார். அவரது பேச்சில் ஒரு சில துளிகள்...

* பசு மாடுகள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன...

* பசு மாட்டைத்தடவி மசாஜ் செய்தால் சுவாச கோளாறுகள் சரியாகின்றன...

* பசு மாட்டோடு நெருங்கி வாழ்ந்தால் காசநோய் கூட குணமாகி விடும்...

இப்படி திரிவேந்திர சிங் ராவத் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவரான அஜய் பட், சமீபத்தில் அங்கு பாய்கிற கருட கங்கா ஆற்றுத்தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் குடித்தால் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம்; சுகப்பிரசவம் ஆகும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் இப்போது திரிவேந்திர சிங் ராவத்தின் பேச்சும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

அது சரி, திரிவேந்திர சிங் ராவத் சொன்னதெல்லாம் உண்மையா என்று கால்நடை பராமரிப்பு வல்லுனர் ஒருவரைக் கேட்டபோது அவர் சொன்ன பதில், “பசு மாடும் பிற உயிரினங்கள் போலத்தான். அதுவும் கார்பன்டை ஆக்சைடைத்தான் வெளியிடுகிறது. இது உலகறிந்த உண்மை” என்பதுதான்.