ஆன்-லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆன்-லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னயை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர், ஆன்லைன் சூதாட்டங்கள் அதைவிட ஆபத்தானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும்’’ எனவும் கோரியுள்ளார்.
மேலும், ஆன்-லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ‘‘ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.