வெங்காயம் 
செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ.80 ஆக குறைந்தது

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மகாராஷ்டிரா வெங்காயம் இன்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலை மலர்

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், சோலாப்பூர், அகமது நகர் ஆகிய பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முன்பு வரை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டு வந்த வெங்காயம் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வரத்து குறைந்து விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.160 வரையிலும் சில்லரை விற்பனையில் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது.

மேலும் மொத்த வியாபாரிகள் 10டன் வரையிலும் சில்லரை வியாபாரிகள் 5டன் வரை மட்டுமே கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் வெங்காயம் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த  மகாராஷ்டிரா வெங்காயம் இன்று ரூ.80-க்கும் ஆந்திரா வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60-க்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள எகிப்து, துருக்கி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரையில் மகாராஷ்டிரா வெங்காயம் ரூ.100-க்கும் ஆந்திரா வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

வெங்காயம் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ஜான் வர்த்தாலிஸ் கூறியதாவது:-

பெங்களூரில் சீசன் முடிந்து விட்டதால் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து இன்று 47 லாரிகளிலும், இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து, துருக்கி வெங்காயம் 5 லாரிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

எகிப்து வெங்காயம் சிகப்பு வண்ணத்தில் இருப்பதாலும், துருக்கி வெங்காயம் மிகவும் பெரிய அளவில் இருந்து வெட்டி வைத்த சிறிது நேரத்தில் கரைந்து விடுவதாலும் இந்த வெங்காயத்தை வாங்கி உபயோகிக்க பொதுமக்கள் பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஓட்டல் தேவைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே 50 கிலோ மூட்டையாக வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். துருக்கி, எகிப்து வெங்காயத்தை வாங்க ஆர்வம் இல்லாததால் மகாராஷ்டிரா மாநில வெங்காயத்தை பொதுமக்கள் கேட்டு வாங்கிச்செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.