சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் அனைத்து அம்மா உணவகங்களிலும், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மண்டலங்களிலும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்த கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளித்தல், கைத் தெளிப்பான், புகைப் பரப்பும் இயந்திரம் மற்றும் வாகனம் மூலம் புகை பரப்பும் பணியும் நடைபெற்று வருகின்றது.
டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றுமாறு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாக அமைகிறது
அதனைத் தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறினால் பெருநகர சென்னை மாநகராட்சி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணியை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். அடையாறு மண்டலம் சார்பில் ஆதம்பாக்கம் பகுதியில் இன்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் 180 மாநகராட்சி ஊழியர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுகாதார சீர்கேடு, கொசுத் தொல்லை தொடர்பான புகார்கள் இருந்தால் 1913 என்ற தொலை பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.