பாட்னா:
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதை மீறி அண்டை மாநில எல்லயோரமாக மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனயாகி வருகிறது. இதை தடுக்க மாநில கலால் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமஸ்திப்பூர் மாவட்டம், ஹலாய் புறநகர் பகுதியில் சிலர் ஒரு வாகனத்தில் மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்த கடத்தல்காரர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீகார் ராணுவ போலீஸ் படையை சேர்ந்த ஹவில்தார் அனில் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார்.
மது கடத்தல் பேர்வழிகள் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதில் இருந்த 262 வெளிநாட்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.