திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் இருந்து 6 பெண்கள் உள்பட 21 பேர் சுற்றுலா விசாவில் சிரியா சென்றனர்.
அதன்பின்பு அவர்கள் அனைவரும் நாடு திரும்பவில்லை. இது பற்றி உறவினர்கள் விசாரித்த போது 21 பேரும் ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரியவந்தது. இதனை உறவினர்கள் மாநில அரசு மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து சென்ற 21 பேரும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் ஹபி சுதின் என்பவர் அமெரிக்க குண்டு வீச்சில் பலியாகி விட்டதாக அவரது உறவினர்களுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தகவல் வந்தது.
அவர்கள் இதனை தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மேலும் வெளியுறவுத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இந்த தகவல் உண்மைதானா? என்பதை விசாரித்து வந்தனர். இதற்கிடையே முர்ஷித் முகம்மது, யாகூ என்ற பெஸ்டின் வின்சென்ட் என்பவர்களும் குண்டு வீச்சில் பலியானதாக கூறப்பட்டது.
கேரளாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த 21 பேரில் அடுத்தடுத்து 3 பேர் பலியாகி விட்டதாக வெளியான தகவல் அவர்களின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது உண்மைதானா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் இந்த இயக்கத்தில் சேர்ந்த மற்றவர்களின் கதி என்ன? என்று அவர்களின் உறவினர்கள் பீதியில் இருந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மங்களசேரியைச் சேர்ந்த சஜிர் (வயது 32) என்ற வாலிபரும் அமெரிக்க குண்டு வீச்சில் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக இவரின் உறவினர்களுக்கு தகவல் வந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து டெலிகிராம் ஆப் மூலம் வந்த இத்தகவலில் சஜிர் இறந்து கிடப்பது போன்ற படமும் இணைக்கப்பட்டிருந்தது. இதனை சஜிருடன் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த ஒருவர்தான் அனுப்பி இருந்தார்.
இந்த தகவலை சஜிரின் உறவினர்கள் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் அளித்தனர். அவர்கள் சஜிர் இறந்தது உண்மைதானா? என்பதை விசாரித்து வருகிறார்கள்.