சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பகலில் மர்மநபர் ஒருவர் போனில் பேசினார். அந்த நபர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப்போவதாக கூறிவிட்டு, போனை வைத்துவிட்டார்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக கண்டுபிடித்தனர்.
போனில் பேசி மிரட்டல் விடுத்தவர் திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீசார், திருச்சி தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி தில்லைநகர் போலீசார் ரஹமதுல்லாவை, அவருடைய வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
துரித உணவு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த தன்னை கடை உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்ததால் ஆத்திரத்தில் முதல்-அமைச்சரை கடத்தப்போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிவிட்டதாகவும் ரஹமதுல்லா தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.