இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.