செய்திகள்

குஜராத்தில் 13 மற்றும் 14-ந்தேதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு: பேரிடர் மீட்புக் குழு குவிப்பு

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு புயலாக மாற வாய்ப்புள்ளதால், குஜராத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அரேபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வருகிற 13 மற்றும் 14-ந்தேதி குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளை  உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.