செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் கண்காணிப்பு

நான்கு நாட்கள் விடுமுறை கட்டண கொள்ளையை தடுக்க போக்குவரத்து துறை மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் போடப்பட்டுள்ளன.

சென்னை:

அரசு ஊழியர்களுக்கு நாளை (12-ந்தேதி) சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாளோடு தொடர்ந்து 2 நாட்கள் 14 மற்றும் 15-ந்தேதி விடுமுறையும் வருகிறது.

திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தியும், செவ்வாய்க் கிழமை சுதந்திர தின விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.

தொடர் விடுமுறை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடும் பயணிகளுக்கு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 2 அல்லது 3 மடங்கு கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஆம்னி பஸ்களில் இணையதளங்களில் அதிக கட்டணம் குறித்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறை கட்டண கொள்ளையை தடுக்க போக்குவரத்து துறை மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் போடப்பட்டுள்ளன.

இவர்கள் இன்று முதல் கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்கிறார்கள்.

ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சோதனை இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கிறது.

அதேபோல 15, 16-ந்தேதி சென்னை வரும் பஸ்களிலும் சோதனை நடத்தப்படும் என்று செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கிடையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பதிவு கொண்ட 2 பஸ்களும், அருணாசல பிரதேச மற்றும் கேரள மாநில ஆம்னி பஸ் ஒன்றும் பிடிபட்டன.

தமிழகத்திற்கு செலுத்த வேண்டிய அனுமதி சீட்டு, சாலை வரி, தகுதி சான்று போன்றவை முறையாக செலுத்தாமல் இயக்கப்பட்டதால் அவற்றை அதிகாரி பழனிசாமி பறிமுதல் செய்து ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.