பாலத்தின் தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி கிடப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

நெல்லை புறவழிச்சாலையில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட ஆம்னி பஸ் இன்று காலை நெல்லை புறவழிச்சாலையில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை:

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று மாலை புறப்பட்டது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த மோகன்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் இன்று காலை நெல்லைக்கு வந்தது. நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் சில பயணிகளை இறக்கிவிட்டு புறவழிச்சாலை வழியாக நாகர்கோவில் நோக்கி சென்றது.

தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி விலக்கு பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ்சை ஆம்னி பஸ் முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த கிளாட்சன் (60), கொட்டாரக்கரையை சேர்ந்த அருள் (27), பெங்களூருவை சேர்ந்த நரசிங்கமூர்த்தி (26), கேரி (35) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.