கலைச்செல்வி 
செய்திகள்

ஓமலூரில் லாரி மோதி கணவன்-மனைவி பலி

ஓமலூரில் லாரி மோதி கணவன் மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரமச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 38). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (31). இவர்களுக்கு பூஜா (15), ஜெயஸ்ரீ (11), பாலஹரிவாசன் (10) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 அளவில் ராஜேஷ்கண்ணன் தனது மனைவி கலைச்செல்வியுடன் ஓமலூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது வங்கியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் கீழே விழுந்ததில், அவர்கள் மீது லாரி ஏறியது. இதனால் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 2 பேரும் உயிரிழந்தனர். உடனே லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.