செய்திகள்

புதுவை எம்.எல்.ஏ.க்கள் 9 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனாதிபதியிடம் அ.தி.மு.க. மனு

காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாய பதவி வகிப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஓம்சக்தி சேகர் மனு அளித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் சேர்ந்து 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மீதமுள்ள 9 எம்.எல்.ஏ.க்களில் லட்சுமி நாராயணன் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும், அனந்தராமன் அரசு கொறடாவாகவும் உள்ளனர்.

இவர்கள் தவிர 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர்களாக பதவி வகிக்கின்றனர். அதோடு அரசை ஆதரிக்கும் 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாய பதவி வகிப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி அலுவலகத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ஓம்சக்தி சேகர் நேற்று மனு அளித்தார்.

இதே மனுவை தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்திலும் ஓம்சக்தி சேகர் அளித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகத்திலும் மனு அளிக்க உள்ளார்.

ஏற்கனவே புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக இரட்டை ஆதாய பதவி விவகாரத்தை கவர்னர் கிரண்பேடி கையில் எடுப்பார் என தெரிகிறது.