கொலை 
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், தனியாக இருந்த ராஜேஸ்வரியை தாக்கியுள்ளனர். இதில் அவர் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த கும்பல், ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ராஜேஸ்வரி இறந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பிய ராஜேஸ்வரியின் மகன், தனது தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் டி.எஸ்.பி. பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.