செய்திகள்

மூதாட்டி கொல்லப்பட்ட காட்டுப்பகுதியில் மேலும் 4 பெண்கள் கற்பழித்துக் கொலை: பிடிபட்டவர்கள் தகவல்

ஆரல்வாய்மொழி அருகே மூதாட்டி கொல்லப்பட்ட காட்டுப்பகுதியில் மேலும் 4 பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக பிடிபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம், யாதவ வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 63).

இவர் ஆரல்வாய்மொழி அருகே மாடன்குடியிருப்பு பகுதியில் நடைபெறும் ஜெபக்கூட்டத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதேபோல் கடந்த 25-ந் தேதி ஜெபக்கூட்டத்துக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் வீரலட்சுமியை கண்டுபிடிக்க முடியாததால் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறி அவரது குடும்பத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலட்சுமியை தேடி வந்தனர்.

மாயமான வீரலட்சுமியின் செல்போன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதைத்தொடர்ந்து செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை விசாரித்தனர். இதில் அந்த செல்போன் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை காட்டியது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆவரைகுளம் சென்று அங்கு சந்தேகத்தின் பேரில் சில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது வீரலட்சுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஆரல்வாய்மொழி கண்ணுப்பொத்தை காட்டுப்பகுதியில் வீசப்பட்ட தகவல்கள் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் மற்றும் போலீசார் குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் கண்ணுப்பொத்தை பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு வீரலட்சுமியின் பிணம் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீரலட்சுமியை 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து கற்பழித்துள்ளனர். அவர்களில் ஆவரைக் குளத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சிக்கினர். மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர்.

சம்பவத்தன்று ஜெபக்கூட்டம் முடிந்த பிறகு வீரலட்சுமி அந்த வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது ஏற்கனவே தெரிந்த நபரான வாலிபரிடம் தனக்கு கால் வலிக்கிறது, எனவே மோட்டார்சைக்கிளில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விட்டு விடுமாறும் வீரலட்சுமி கூறி இருக்கிறார்.

இதை தனக்கு சாதமாக்கி கொண்ட அந்த வாலிபர் வீரலட்சுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கண்ணுப்பொத்தை பகுதிக்கு சென்றுள்ளார். வழிமாறி சென்றதால் வீரலட்சுமி சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவர் கூறியதை கண்டுகொள்ளாமல் வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.

கண்ணுப்பொத்தை பகுதிக்கு சென்றதும் வீரலட்சுமியை நிர்வாணமாக்கி அவர் வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல் அவரை மிரட்டி கற்பழித்துள்ளார். வீரலட்சுமி அவருடன் போராடி சத்தம் போட்டுள்ளார். அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் யார் காதிலும் அவரது அலறல் சத்தம் கேட்கவில்லை.

வீரலட்சுமியை தான் கற்பழித்தது மட்டுமல்லாமல் இந்த விவரத்தை தனது நண்பர்களுக்கும் செல்போனில் தெரிவித்துள்ளார். உடனே அவரது நண்பர்கள் 6 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்களும் வீரலட்சுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 7 பேரிடமும் போராடி ஓய்ந்து போன வீரலட்சுமி உங்களை போலீசில் சொல்லி ஜெயிலுக்குள் தள்ளாமல் விட மாட்டேன் என கூறி உள்ளார்.

இதனால் பயந்து போன அந்த கும்பல் வீரலட்சுமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் கள்ளிச்செடிகளுக்கு நடுவே பிணத்தை தூக்கிப்போட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதற்கிடையே கைதான கும்பலைச் சேர்ந்த சிலர் கூடங்குளம் பகுதியில் பிச்சையெடுக்கும் பெண்ணை கற்பழித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் கண்ணுப் பொத்தை பகுதிக்கு அவர்கள் மேலும் பல பெண்கள் கடத்தி வந்து கற்பழித்து கொன்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் கைதான 4 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் வீரலட்சுமியை தவிர மேலும் 4 பெண்களை கண்ணுப் பொத்தை பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து கொன்றதாக பரபரப்பு தகவலை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இன்று 2-வது நாளாக கண்ணுப்பொத்தைக்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர். கைதான கொலையாளிகளும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் அவர்களால் பெண்கள் புதைக்கப்பட்ட இடத்தை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை.

அதேசமயம் அங்கு சேலைகள், பெண்களின் உள்ளாடைகள் மக்கிய நிலையில் ஆங்காங்கே கிடந்தன. இதனால் கொலையாளிகள் கூறுவது உண்மையாக இருக்கலாம் என போலீசார் நம்புகிறார்கள். இதனால் தொடர்ந்து அங்கு தேடுதல் பணி நடந்து வருகிறது.

இந்த காமக்கொடூர கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்ட பெண்கள் யார், அவர்களை அந்த கும்பல் எப்படி கடத்தி வந்தது? என்பது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.