பனப்பாக்கம்:
பானாவரம் அடுத்த பள்ள குன்னத்தூரை சேர்ந்த சீனிவாசன் மனைவி சகுந்தலா (வயது70). கூலி வேலை செய்து வந்தார்.
இவர்களுக்கு 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.
சகுந்தலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சகுந்தலா தனியாக வசித்து வருகின்றார். இவருக்கு தினமும் இவரது மகன் மோகன்தாஸ் வீட்டில் இருந்து உணவு கொடுத்து விடுவது வழக்கம்.
இன்று காலை மோகன்தாஸ் தனது மகள் துர்காதேவியிடம் சகுந்தலாவுக்கு உணவு கொடுத்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். துர்கா தேவி அங்கு சென்ற போது சகுந்தலா ஆடையின்றி புடவையால் நெரித்தும், தலையில் வெட்டு காயத்துடனும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துர்காதேவி அங்கிருந்து அலறியடித்தபடி ஓடி வந்து தனது பெற்றோரிடம் கூறினார். அங்கு வந்து பார்த்த மோகன்தாஸ் தனது தாயார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இது குறித்து பனப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வேலூர் எஸ்.பி. பகலவன், அரக்கோணம் எஸ்.பி குத்தாலிங்கம், பனப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சகுந்தலாவின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சகுந்தலாவின் உடல் ஆடையின்றி நிர்வாணமாக கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதே தெருவில் உள்ள லட்சுமி (வயது52) என்ற பெண் தலையில் பாறாங்கல் போட்டு தாக்கப்பட்டுள்ளார். அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரண்டு சம்பவத்திலும் ஒரே நபரே ஈடுபட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.
இது குறித்து பனப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.