சென்னை:
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு அதிரடியாக அறிவித்த மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த கால அவகாசம் வழங்கியது.
பழைய ரூபாய் நோட்டுகள் மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் திரும்ப பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் 10 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.467 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறை சந்தேகப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் தங்கள் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. நிறைய பஞ்சாயத்து தலைவர்களும் கூட்டுறவு வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் கணினிமயமாக்க வேண்டும் என்று மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதை செயல்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினிமயமாக்கப் பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை. இதில் அரசியல் வாதிகள் யாரும் முதலீடு செய்யவில்லை.
ஆதாரங்கள் இல்லாமல் அரசியலுக்காக சிலர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இதுபற்றி கூட்டுறவு வங்கி கணக்குகளை முழுமையாக அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
அதுமட்டுமின்றி, நபார்டு வங்கி, ரிசர்வ் வங்கி பிரதி நிதிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், விஜிலன்ஸ் அதிகாரிகளும் இதுபற்றி கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதிக அளவு பண முதலீடு செய்யப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விசாரித்து விட்டு எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறி உள்ளனர்.
அது மட்டுமல்ல கூட்டுறவு வங்கி பணமான ரூ.467 கோடியை ரிசர்வ் வங்கி வரவு வைத்து அதற்கான சான்றிதழையும் கூட்டுறவு வங்கிக்கு வழங்கி உள்ளது.
எனவே அரசியல் காரணங்களுக்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளே தவிர இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்காக நடத்தப்படும் வங்கியாகும். இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடிக்கு பயிர் கடன் வழங்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
வறட்சி நிவாரண உதவி, கடன் தள்ளுபடி போன்ற அரசின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு முழுவதுமாக சென்றடைய கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.