நித்யானந்தா 
செய்திகள்

நித்யானந்தா மீது புதிய வழக்கு - குஜராத் போலீஸ் நடவடிக்கை

ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ காட்டியதாக நித்யானந்தா மீது குஜராத் போலீசார் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

அகமதாபாத்:

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவான அவர் வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.

கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு ஆன்லைனில் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கர்நாடகா கோர்ட்டு உத்தர விட்டது. மேலும் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே கடத்தல் வழக்கில் அவரை கைது செய்வதற்காக குஜராத் போலீசார் சர்வதேச போலீஸ் (இன்டர்போஸ்) உதவியை நாடினர். அதன்பேரில் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து சர்வதேச போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும், குழந்தைகள் நல அமைப்பினரிடமும் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆசிரமத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர், குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி உள்ளனர்.

மேலும் நித்யானந்தாவுக்கு சாதகமான அறிக்கைகளை பெறும் வகையில் குழந்தைகளை அச்சுறுத்தி உள்ளனர். எனவே நித்யானந்தா மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் நித்யானந்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணா, டி.எஸ்.பி.கள் கமரியா, ரியால் சர்வையா, சர்தா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.