பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். நகராட்சி பொதுஏலத்தில் ஒரு குறிப்பிட்ட கிராம மக்கள் ஏலத்தினை எடுத்து மறு ஏலம் மூலமாக அவர்கள் சந்தையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தினை எடுத்து மறுஏலம் விட்டதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்டுசந்தை ஏலத்தை ரத்துசெய்த நகராட்சி வரும் 27-ந் தேதி மீண்டும் ஏலம்விட முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடுகள், கோழிகள் விற்பனை நடைபெற்றது. இதில் முறைகேடு நடப்பதாக நகராட்சிக்கு தகவல் வந்ததை தொடர்ந்து ஆணையாளர் சரஸ்வதி என்ஜினீயர் சக்திவேலு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் அடங்கிய குழுவினர் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையில் ஆட்டுச்சந்தையில் ஆய்வு நடத்தினர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஆடுகள் நுழைவு கட்டணமாக நகராட்சி அறிவித்திருந்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் ஆடுகளுக்கு தண்ணீர் ஊற்றி எடையை அதிகரிப்பது நோய் வாய்ப்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அவற்றை கண்காணிக்க கால்நடை மருத்துவக் குழுவினர் வந்துள்ளனர் என்றார்.
நகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை திருமங்கலத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ஏலம் எடுத்த கிராமத்தினர் கூறுகையில் நகராட்சி ஆணையாளர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் நாங்கள் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மறுஏலம் எடுத்தாலும் எங்கள் கிராமமே ஏலம் எடுக்கும் என்றும் தெரிவித்தனர்.