செய்திகள்

ஒருநாள் போட்டி தரவரிசையில் 6-வது முறையாக முதல் இடத்தை பிடித்த இந்தியா

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 6-வது முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை தொட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

5 ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு 3-வது இடத்தில் இருந்தது. 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் 120 ரேட்டிங் புள்ளியுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது.

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 6-வது முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

கடைசியாக 2014-ம் ஆண்டு நவம்பரில் இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் இருந்தது. மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக 1994-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து 1995 மார்ச் வரை 4 மாதம் ‘நம்பர் 1’ இடத்தில் இருந்தது.

அதை தொடர்ந்து 1995 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 3 மாதமும், 2013 ஜனவரி முதல் 2014 ஜனவரி வரை ஒரு வருடமும், 2014 செப்டம்பரில் 1 மாதமும் முதல் இடத்தில் இருந்தது.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலிலும் ‘நம்பர் 1’ இடத்தில் தான் உள்ளது. 20 ஓவர் போட்டியில் மட்டும் 5-வது இடத்தில் இருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஒருநாள் போட்டி தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 114 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து (113 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (111) 5-வது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் முறையே 6 முதல் 12-வது இடங்களில் உள்ளன.