இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக மாசு கலந்த பனிமூட்டம் நிகழ்வதால் சாலை விபத்துக்கள், ரெயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகிறது. டெல்லியில் மட்டும் அடுத்த வாரம் வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை கட்டுமானப்பணிகள் நடத்த, அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து இயங்கும் கனரக வாகனங்கள் நகரத்தில் இயங்கவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் நிலமைக்கேற்ப பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு காற்று மாசுபாடை ஓரளவு குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் ஒன்றை மீண்டும் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.