செய்திகள்

கேரளாவில் ஒக்கி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.24 லட்சம் நிதியுதவி

கேரளாவில் ஒக்கி புயலில் பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.24 லட்சம் நிதியுதவியை முதல்-மந்திரி பினராய் விஜயன் வழங்கினார். #OckhiStorm #Fishermen #PinarayiVijayan

மாலை மலர்

ஒக்கி புயல் தாக்கியதில் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆழ்கடலுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சூறாவளி காற்றில் சிக்கி பல்வேறு பகுதிகளுக்கும் இழுத்துச்செல்லப்பட்டனர்.

இதைதொடர்ந்து மாயமான மீனவர்களை விமானம், ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. நிவாரண பணிகளும் மாநில அரசு மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை ஒக்கி புயலில் பலியான 76 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 144 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்-மந்திரி பினராய் விஜயன் இதில் கலந்துகொண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை வழங்கினார். முதல்கட்டமாக மொத்தம் 25 குடும்பத்தினருக்கு தலா ரூ.24 லட்சம் வழங்கப்பட்டது.

மாநில அரசின் இழப்பீடாக ரூ.16 லட்சமும், மத்திய அரசின் நிதி ரூ.4 லட்சமும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா திட்டத்தில் ரூ.2 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் என்று மொத்தம் ரூ.24 லட்சம் வழங்கப்பட்டது.

நிதிஉதவியை பெற வந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. நிகழ்ச்சியில் பினராய் விஜயன் பேசும்போதும் கேரளாவில் இருந்து மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் கதி என்ன? அவர்களது சரியான எண்ணிக்கை போன்றவை பற்றி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். இதில் இறந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் இதே நிதிஉதவி வழங்கப்படும் என்றார்.

ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிட ஏற்கனவே முதல்-மந்திரி பிரனாய் விஜயன் விழிஞ்ஞம் பகுதிக்கு சென்றபோது அவரை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.