நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி ஒக்கி புயல் வீசியது. இதில் மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
புயல் தாக்கி ஒரு மாதம் முடியும் நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமையில் 8 பேர் குழுவினர் தமிழகம் வந்தனர்.
இதில், 3 பேர் சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட சென்றனர். 5 பேர் குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் 3 பிரிவாக பிரிந்து கடற்கரை கிராமங்கள், விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடற்கரை கிராமங்களுக்கு சென்ற குழுவினர் கொல்லங்கோடு பகுதியில் இருந்து பயணத்தை தொடங்கினர். அங்கு மீனவ பிரதிநிதிகள், ஆலய பங்கு தந்தையரை சந்தித்து கருத்து கேட்டனர்.
அப்போது அவர்கள் அரசு புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே அறிவித்திருந்தால் மீனவர்களின் உயிர் இழப்பை தடுத்து இருக்கலாம். புயல் வீசிய பின்பு தேடுதல் பணியை முடுக்கி விட்டிருந்தால் பல மீனவர்களை உயிருடன் மீட்டு இருக்கலாம் என்றும் கூறினர்.
மீனவ பெண்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் பலரும் மத்திய குழுவினரை சூழ்ந்து நின்று சரமாரியாக கேள்வி கேட்டனர். வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ ஆகியோர் சமரசம் செய்தனர்.
இதே நிலை தூத்தூர், பூத்துறை, வள்ளவிளை பகுதிகளிலும் ஏற்பட்டது. குளச்சலில் மீன்பிடி படகுகளுக்கு அதிகாரிகள் முறையாக உரிமம் வழங்குவதில்லை என்று மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஒவ்வொரு கிராமங்களிலும் மீனவர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை சமரசம் செய்ய அதிகாரிகள் திணறினர்.
அதன் பின்பு மத்திய குழு விவசாய சேதங்களை பார்வையிட சென்றது. பெரியகுளத்தில் நடந்த ஆய்வின்போது மத்திய குழுவினரை பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா மற்றும் விவசாய பிரதிநிதிகள் முற்றுகையிட்டனர்.
குமரி மாவட்டத்தில் பல ஏக்கரில் பயிரிட்ட நெற்பயிர்கள், வாழைகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. அதனை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களையும் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களிடம் குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
மத்திய குழு இன்று 2-வது நாளாக குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது. மூத்த அதிகாரி பால்பாண்டி தலைமையிலான குழு குளச்சல், முட்டம் பகுதிகளிலும், மனோகரன் தலைமையிலான குழு திருப்பதிசாரம் பகுதியிலும் ஆய்வு நடத்தினர்.
திருப்பதிசாரத்தில் மழையால் சேதமான விதை நெல் குடோனையும் பார்வையிட்டனர். அப்போது அங்கு கூடி இருந்த விவசாயிகள் திருப்பதிசாரத்தில் நாற்று நட்டதும் மழை பெய்தது. 15 நாட்களாக மழைநீரில் நாற்றுகள் மூழ்கி கிடந்ததால் அழுகி போனது. அவற்றிற்குரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்டனர். அதற்கு ஆவண செய்வோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதுபோல அதிகாரி சுமன் தலைமையிலான குழு பேச்சிப்பாறை, குற்றியாறு பகுதியிலும் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகலுக்குள் ஆய்வை முடித்துக் கொண்டு மத்திய குழுவினர் சென்னை செல்கிறார்கள். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கையை அளிக்கிறார்கள்.