செய்திகள்

ஒக்கி புயல் தாக்குதலில் ஒரே கிராமத்தில் மாயமான 223 மீனவர்கள்

ஒக்கி புயல் தாக்குதலில் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இருந்து 20 விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற 223 மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

ஒக்கி புயல் தாக்கியதில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை கப்பல் படை கப்பல்கள், ஹெலிக்காப்டர்கள் மூலம் தேட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி மீனவர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 433 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இருந்து 20 விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற 223 மீனவர்கள் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தில் அதிகமாக மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீரோடியில் இருந்து 3 வள்ளங்களில் சென்ற 26 மீனவர்களும், ஒரு விசைப்படகில் சென்ற 13 மீனவர்களும் மாயமாகி உள்ளனர். மார்த்தாண்டம் துறையில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 11 மீனவர்களும் மாயமாகி உள்ளனர். இரவி புத்தன்துறை இருந்து 2 வள்ளங்களில் சென்ற 1 மீனவரும், மாயமாகி உள்ளார்.

சின்னத்துறை இருந்து 2 வள்ளங்களில் சென்ற 2 மீனவர்களும், 6 விசைப்படகில் சென்ற 64 மீனவர்களும் மாயமாகி உள்ளனர். தூத்தூரில் இருந்து 1 வள்ளத்தில் சென்ற 2 மீனவர்களும், 3 விசைப்படகில் சென்ற 37 மீனவர்களும் மாயமாகி உள்ளனர்.

பூத்துறையில் இருந்து 1 வள்ளத்தில் சென்ற 4 மீனவர்களும், 2 விசைப்படகில் சென்ற 24 மீனவர்களும் மாயமாகி உள்ளனர். குளச்சலில் 2 விசைப்படகில் சென்ற 13 மீனவர்களும், முள்ளூர்துறையில் இருந்து சென்ற 2 வள்ளங்களும், மிடாலத்தில் இருந்து 2 விசைப்படகில் சென்ற 13 மீனவர்களும் மாயமாகி உள்ளனர். மொத்தம் 433 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.