திருவனந்தபுரம்:
ஒகி புயல் காரணமாக கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த மாதம் 29-30 தேதிகளில் தென் கேரளாவின் கடலோரப் பகுதிகளை தாக்கிய ஒகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகினர்.
அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக களமிறங்கியது. 50-க்கும் அதிகமான பிரேதங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சுமார் 95 மீனவர்களை காணவில்லை என கூறப்படும் நிலையில், இன்று மட்டும் கடலில் இருந்து கரை ஒதுங்கிய 11 மீனவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு மாவட்ட கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய 8 மீனவர்களின் பிரேதங்களும், கொச்சி, திரிச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய 3 பிரேதங்களும் இன்று கைப்பற்றப்பட்டதாகவும், இவர்களையும் சேர்த்து கேரள மாநிலத்தில் ஒகி புயலால் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.