சென்னை:
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து சென்று நேற்று அதிகாலை புயலாக மாறியது.
இந்த புயலுக்கு ‘ஒக்கி’ என வங்காள தேசம் பெயர் சூட்டியது. ஒக்கி புயல் நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது.
20 கி.மீ. வேகத்தில் அது கன்னியாகுமரி நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று பிற்பகலில் கன்னியாகுமரியை மிக அருகில் 60 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
புயல் உருவானதுமே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் மழை கொட்டத் தொடங்கியது. புயல் நெருங்க நெருங்க மழை மிக கடுமையாக பெய்தது.
மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் புயல் காற்று தரைப் பகுதி நோக்கி வீசியதால் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறியது.
குமரி கடல் பகுதியில் புயல் உருவாவது என்பது அபூர்வம். காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகும். சில நாட்களில் அவை வலு இழந்து விடும். நேற்று உருவான புயல் கரை பகுதியை நோக்கி நெருங்கி வந்ததால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அச்சத்துடனேயே இருந்தனர்.
கன்னியாகுமரியை மிரட் டிய புயல் நள்ளிரவு 11.15 மணிக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி 25 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியது. இன்று அதிகாலையில் கேரள கடல் பகுதிக்கு சென்றது.
தற்போது திருவனந்தபுரத்துக்கு மேற்கே அரபிக்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களான மினிக்காய் தீவில் இருந்து கிழக்கு தென் கிழக்கில் 160 கி.மீ. தொலைவிலும், அமினி தீவில் இருந்து 290 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுத்து லட்சத்தீவு வழியாக கடந்து செல்லும். அதன் பிறகு மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு சென்று விடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. என்றாலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கும்.
கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் அனேக இடங்களில் மழை நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அவ்வப்போது பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் மழையால் பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் காய்ந்து கிடந்த சிறிய, பெரிய ஓடைகள், ஆறுகள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஏரி, குளங்கள், கண்மாய்களை நிரப்பியது. அவற்றில் இருந்து வெளியேறிய உபரி தண்ணீர் சாலைகளிலும், ஊருக்குள்ளும் புகுந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.
குற்றாலத்தில் அருவிகளே தெரியாத அளவுக்கு உயரத்தில் இருந்து நதி பாய்ந்து வருவது போல் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு வெள்ளம் கொட்டியது. தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
தென் மாட்டத்தின் வற்றாத ஜீவநதியாக ஓடி காலப்போக்கில் வறண்டு விட்ட தாமிரபரணியிலும் இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதே போல் வைகை ஆற்றிலும் பல ஆண்டுகளுக்கு பின் வெள்ளம் ஓடுகிறது.
இந்த புயல் மழையால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்று பலமாக வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்சார கம்பங்களும் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருப்பதுடன் பல இடங்களில் 2 நாட்களாக மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நீடிப்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 45 செ.மீ. (450 மில்லி மீட்டர்) மழை பெய்துள்ளது.
மணிமுத்தாறில் 37 செ.மீ., கொட்டாரம், தோவாளையில் 22 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.