செய்திகள்

117 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 117 மீனவ குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதியுதவியாக வழங்கினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தை “ஒக்கி” புயல் தாக்கியதால், மீன்பிடி படகுகள், உபகரணங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளானது. ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு சென்ற மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் காணாமல் போயினர்.

மீன்பிடிக்கச் சென்று “ஒக்கி” புயலினால் கரை திரும்ப முடியாமல் போன மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3,506 மீனவர்கள் மற்றும் அவர்களது 24 நாட்டுப் படகுகள், 264 மீன்பிடி விசைப்படகுகள் மீட்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒக்கி புயலினால் 27 மீனவர்கள் உயிரிழந்தனர்.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 177 மீனவர்கள் காணாமல் போயினர்.

“ஒக்கி” புயலினால் உயிரிழந்த 27 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகை தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முன்பே வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக வருவாய் நிருவாக ஆணையர் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 139 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 3 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 15 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 19 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 1 மீனவர் என மொத்தம் 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 35 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிவாரண நிதியுதவியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ், கடம்பூர் ராஜூ, மற்றும் விஜயகுமார் எம்.பி., தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். #Tamilnews