களக்காடு:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஒக்கி புயலால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக குமரி மாவட்டத்தை ஒகி புயல் புரட்டி போட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சேதங்களையும், ஒக்கி புயல் சேதங்களையும் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் சஞ்சீவ் குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் சென்னை மாவட்டங்களில் உள்ள மழை பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஒக்கி புயலில் சேதமடைந்த நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம், ஏர்வாடி அணைக்கரையில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம், திருக்குறுங்குடியில் புயலில் சாய்ந்து விழுந்த வாழைகள் ஆகியவற்றை குழுவினர் பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும் புயல் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
மத்திய குழுவினருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் வருவாய்துறையினர் சென்றனர்.