குழந்தையுடன் பிரியா 
செய்திகள்

ஒக்கி புயல்: ஒரு மாதத்திற்கு பிறகு அந்தமானில் உயிருடன் கரை ஒதுங்கிய 7 மீனவர்கள்

ஒக்கி புயலில் சிக்கி ஒரு மாதத்திற்கு பிறகு அந்தமானில் உயிருடன் கரை ஒதுங்கியதாக 7 குமரி மற்றும் கேரள மீனவர்கள் போன்மூலம் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

ஒக்கி புயல் தாக்கியதில் குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விசைப்படகு மூலம் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் பலர் புயலில் சிக்கி உயிரிழந்தனர். ஏராளமான மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

மேலும் பல மீனவர்களின் உடல்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கின. அவற்றில் பல உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளதால் அவை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அந்த மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து மாயமான மீனவர்கள் பலரது குடும்பத்தினர் அவர்கள் எங்காவது உயிரோடு கரை சேர்ந்திருப்பார்கள். எப்படியும் தங்களை தொடர்பு கொள்வார்கள் என்று முழு நம்பிக்கையுடன் காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் உயிரோடு அந்தமானில் கரை ஒதுங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் புஷ்ப ராஜன் (வயது 51). இவர் ஒக்கி புயலுக்கு முன்பு ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமானவர். இவரது கதி என்னவென்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்த படி இருந்தனர்.

இந்த நிலையில் ஒக்கி புயல் தாக்கி ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென்று புஷ்ப ராஜனின் மகள் பிரியாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய புஷ்பராஜன் தான் ஒக்கி புயலில் சிக்கி அந்தமானில் உயிரோடு இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் அவருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த மேலும் 6 மீனவர்களும் அந்தமானில் உயிருடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் பேசுவதற்குள் அவரது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அந்த நம்பருக்கு அவரது மகள் தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை.

எனது தந்தை புஷ்பராஜன் போன் மூலம் பேசி தான் உயிரோடு இருப்பதாக கூறியதை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீண்டநேரம் பேச முடியாவிட்டாலும் அவர் குரலை கேட்ட மகிழ்ச்சியே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. அவர் சொந்த ஊருக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர் புஷ்பராஜன் மற்றும் குமரி மீனவர்கள் 6 பேர் அந்தமானில் உயிருடன் இருக்கும் தகவலை அந்த பகுதி பங்குத்தந்தைக்கு பிரியா தெரிவித்தார். அவர்களை உடனே மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர அவர் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த தகவல் பங்குத்தந்தை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews