செய்திகள்

சூலூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை பிரசாரம்

சூலூர் தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். #OPannerselvan #SulurConstituency

மாலை மலர்

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் மனுக்கள் வாபஸ் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சூலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சுயேட்சைகள் என 22 பேர் போட்டியிடுகிறார்கள்.

சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து சூலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டார்

துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு இருகூரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

பின்னர் சூலூர், சோமனூர், வாகராயம் பாளையம், தென்னம் பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 5, 6-ந் தேதிகளில் சூலூரில் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்தை தொடர்ந்து சூலூர் தொகுதி இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. #OPannerselvan #SulurConstituency