செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்று மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என்று தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றன.  கடந்த இரண்டு நாட்களாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரனை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து வருகின்றனர். தினகரனுக்கு சுமார் 31 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்து வரும் நிலையில் மற்றொரு புறம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ரீதியாக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வருகிறார். இதனால் அ.தி.மு.க-வில் குழப்பமானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.

தேனியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.


அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி  அரசுக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.