ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., இரு அணிகளாக பிளவுபட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியாகவும் எதிரும் புதிருமாக அ.தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதனை மீட்க இரு அணிகளும் போட்டி போட்டு ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளன. இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் மட்டுமே மீண்டும் இரட்டை இலை கிடைக்கக் கூடிய சூழல் உள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். அணியின் 2 பிரதான கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
கடந்த 4 மாதங்களாக அணிகள் இணைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த போதிலும் இரு அணிகளும் தொடர்ந்து தனித்து செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் இணைய வாய்ப்பு இல்லை என்று சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்து போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். நீட்தேர்வு, குடிநீர் பிரச்சனை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்கள் பிரச்சனையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன் முதல் கட்டமாக சென்னையில் வருகிற 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னையில் போராட்டம் நடத்தும் இடம் இன்னும் முடிவாகவில்லை. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, வள்ளுவர் கோட்டம் ஆகிய இரு இடங்களில் ஏதாவது ஒன்றில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடம் அனுமதிக்கப்படும் என்று தெரியவில்லை.
தமிழக அரசை கண்டித்து இதுவரை ஓ.பி.எஸ். பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போதுதான் முதன் முதலாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். அணியினர் கையில் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏ. கூறியதாவது:-
இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் மக்கள் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சென்னையில் குடிநீர் பிரச்சனை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் டெங்கு பாதிப்பும் அதிகமாக உள்ளது.
நீட் தேர்வு விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில் அரசு மெத்தன போக்கில் செயல்படுகிறது.
தூங்குகிற இந்த அரசை தட்டி எழுப்புவதற்காகத்தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து இனி தமிழகம் முழுவதும் இதே போன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதி நீர் பெற்று சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். அது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க தவறி விட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் இந்த அரசு கோட்டை விட்டு விட்டது.
மக்களை பாதிக்க கூடிய டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு அவருடைய பிரச்சனைகளை சந்திப்பதற்கே நேரம் இல்லை.
எனவே மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவது அமைச்சர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து எதிர் அணியினர்தான் சொல்கிறார்கள். ஆனால் எங்கள் தரப்பில் இணைப்பு பற்றி சிந்திக்கவில்லை. அது தேவையற்றதும் கூட.
அவர்கள் இணைப்பு குறித்து அக்கறை காட்டுவதற்கு காரணம் இணைந்தால் அவர்களுக்கு தற்காப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் எங்களை பொறுத்தவரை அது தற்கொலைக்கு சமம். அதனால் நாங்கள் தற்கொலைக்கு தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக புரட்சித் தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் உடனே சென்னைக்கு வரும் படி ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி நிர்வாகிகள் அனைவரும் சென்னை புறப்பட்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை (சனிக்கிழமை) அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வமும், புரட்சித்தலைவி அம்மா அணி மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே தலைமை கழகத்தை கைப்பற்றவும் கட்சி வழி நடத்தவும் பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணியினர் திடீரென ஆலோசனை நடத்த தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பாக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு தொண்டர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.