முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.
ஏற்கனவே அவர் 2 முறை ஆஜராக முடிவு செய்த தேதி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது 1-ந்தேதி ஆஜராக முடிவு செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்- அமைச்சர் ஆனார்.
இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக சாட்சியம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லாதது ஏன்? பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்தது யார்? என்பன உள்பட பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.