நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது வங்காள தேசம் பேட்டிங் செய்தது. அப்போது பந்து வீசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட்டிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் வங்காள தேசத்திற்கு எதிராக அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கும் சிட்டகாங் டெஸ்டில் ஹசில்வுட் பங்கேற்கமாட்டார். அதேபோல் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் சிட்டகாங் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் ஹசில்வுட்டிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்தயாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்தார். புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.
டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டிற்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் உதவும் வகையில் இருந்தது. 2-வது போட்டியிலும் இதேபோன்ற ஆடுகளம்தான் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் ஏற்கனவே, ஜேக்சன் பேர்டு என்ற வேகப்பந்து வீச்சாளர் உள்ளார். இதனால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.