அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் பலியானதுடன், 12 பேர் படுகாயமடைந்தனர். மன்ஹாட்டன் பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ட்ரக்கில் வந்த மர்ம நபர் ஒருவன், அவர்களை இடித்து தள்ளிவிட்டுச் சென்றுள்ளான். மேலும், அவ்வழியாக வந்த பள்ளி வாகனத்தின் மீது மோதி அந்த ட்ரக் நின்றதாகவும், அதன் பின் அந்த நபர் துப்பாக்கியுடன் வெளியே வந்து தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் அந்த மர்ம நபரை சுட்டுப் பிடித்துள்ளனர். இதன் பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரான சாய்ஃபுல்லோ சாய்போவ் என்பது தெரியவந்தது. 29 வயதான சாய்போவ் மருத்துவமனையில் தனது அறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை பறக்கவிடச் சொல்லி கேட்டுள்ளான். மேலும், தான் நடத்திய தாக்குதலுக்காக பெருமை அடைவதாகவும் கூறியிருக்கிறான்.
இதனிடையே தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"நியூயார்க் தாக்குதல் நடத்திய தீவிரவாதி சந்தோஷமாக இருக்கிறான். மருத்துவமனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை பறக்கவிட கேட்டிருக்கிறான். 8 பேரை கொன்று, 12 பேரை காயப்படுத்திய அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று டிரம்ப் டுவிட் செய்துள்ளார்.