செய்திகள்

ஆன்-லைன் மூலம் நாய் வாங்க முயற்சித்து ரூ.1½ லட்சத்தை இழந்த நர்சு

தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலைப்பார்த்து வந்த பெண் ஒருவர் ஆன்- லைனில் நாய் வாங்க முயற்சித்து ரூ.1½ லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

இப்போதெல்லாம் இணைய தளம் ஆன்- லைன் மூலம் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்க முடிகிறது.

இதே போல் ஆன்- லைனில் நாய் வாங்க முயற்சித்து புதுவையை சேர்ந்த பெண் பணத்தை இழந்து இருக்கிறார்.

புதுவை முத்தியால் பேட்டை சாலை வீதியை சேர்ந்தவர் திவ்ய பிரியா. (வயது 25). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி ஆன்- லைனில் பொருட்கள் வாங்குவது வழக்கம்.

இதே போல் ஆன்- லைனில் பார்த்து கொண்டு இருந்தபோது ஒரு நிறுவனம் ஓடோ போன் விளம்பரத்தில் வரும் ‘பக் பப்பி’ நாயை போன்ற தோற்றம் உடைய அழகான நாயை விற்பதாக அறிவித்து இருந்தது.

எனவே, அந்த நாயை வாங்குவதற்கு ஆசைப்பட்ட திவ்யபிரியா ஆர்டர் கொடுத்தார்.

இதற்காக இணைய தளம் மூலம் நாயின் விலை பேசப்பட்டது. ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொடுத்தால் நாயை தருவதாக எதிர் முனையில் இருந்து கூறினார்கள்.

அதன்படி வங்கி கணக்கு மூலம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை அந்த நிறுவனத்தின் கணக்குக்கு திவ்யபிரியா மாற்றினார்.

குறிப்பிட்ட நாளில் நாய் பாதுகாப்பான முறையில் திவ்ய பிரியாவின் முகவரிக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், நாய் வந்து சேரவில்லை. மறுபடியும் அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

இது சம்பந்தமாக திவ்யபிரியா பெரியகடை போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் முருகன் சைபர் கிரைம் பிரிவின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews