செய்திகள்

நர்சை கடத்தி வந்து, 3 நாட்களுக்கு பிறகு அனாதையாக விட்டு சென்ற வாலிபர்

திருமண ஆசை காட்டி நர்சை அழைத்து வந்த வாலிபர், அவருடன் 3 நாட்கள் தங்கிவிட்டு அனாதையாக விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தக்கலை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

இளம்பெண்ணின் தாயார் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது தந்தையும் குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பெண், தனியாக திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.

ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த போது அங்கு சிகிச்சைக்கு தக்கலையை அடுத்த அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். அவருக்கு தேவையான உதவிகளை மதுரை பெண் செய்தார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

அந்த வாலிபர் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றார். அதன்பின்பும் நர்சும், வாலிபரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர், சமீபத்தில் ஊருக்கு வந்தார். உடனே அவர் காதலியை சந்திக்க திருவனந்தபுரம் சென்றார். அங்கு நர்சை சந்தித்து, அவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

வாலிபரின் ஆசை வார்த்தையில் மயங்கிய நர்சு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து அந்த வாலிபருடன் அழகிய மண்டபத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு பெற்றோரிடம், நர்சை அறிமுகம் செய்த வாலிபர் அவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

பின்னர் அவர்கள் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே 3 நாட்கள் தங்கினர். பின்னர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அழகிய மண்டபத்தில் திருமணம் நடத்த பெற்றோர் மறுத்துவிட்டனர். எனவே வாலிபர், மேக்காமண்டபத்தில் உள்ள சகோதரி வீட்டில் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி நர்சை நேற்று அங்கு அழைத்து சென்றார்.

அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சகோதரி மறுத்து விட்டார். மேலும் நர்சிடம் இருந்து வாலிபரை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் நர்சு அனாதையாக நிற்கும் நிலை ஏற்பட்டது.

காலையில் சென்ற நர்சு மாலையில் அனாதையாக விடப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அறிமுகம் இல்லாத ஊர் என்பதால் திகைத்து போன நர்சு, அவரை தேடி வாலிபரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து நர்சு, அக்கம் பக்கத்தார் உதவியுடன் தக்கலை போலீஸ் நிலையம் சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விபரங்களை கூறினார். அப்போது இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால் போலீசார் அவரை வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று காலை வரும்படி கூறினர்.

திருமண ஆசை காட்டி திருவனந்தபுரத்தில் இருந்து நர்சை அழைத்து வந்த வாலிபர், அவருடன் 3 நாட்கள் தங்கிவிட்டு அனாதையாக விட்டு சென்ற விவகாரம் நேற்றிரவு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.