கருங்கல்:
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மாலைவிளாகம் பகுதியை சேர்ந்த ஹென்றி மகள் ஆசிகா (வயது 22), நர்சு. அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். ஆனால், ஆசிகா தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என கூறி மறுத்து வந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில், கடந்த 17 -ந் தேதி வீட்டில் இருந்த ஆசிகா பூச்சிமருந்தை ஊசி மூலம் உடலில் ஏற்றி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று ஆசிகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.