செய்திகள்

இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 23.5 சதவீதம் உயர்வு

இந்தியாவில் 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டு கணக்கின்படி தனிநபர் ஈட்டும் வருமானத்தில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 23.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டதாக வருமானவரி இலாகா தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் தனிநபர் ஈட்டும் வருமானத்தில் கோடீசுவரர்கள் குறித்த புள்ளி விவரங்களை வருமானவரி இலாகா நேற்று வெளியிட்டது. அதன்படி நாட்டில் 59,830 கோடீசுவரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 23.5 சதவீதம் அதிகம். இவர்களது ஒட்டு மொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடி ஆகும்.

இதில் 55,331 தனிநபர்கள் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டியதாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை 3,020 பேரும், ரூ.10 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை 1,156 பேரும் சம்பாதித்தாகவும் கணக்கு காட்டி உள்ளனர். இந்த மதிப்பீட்டு ஆண்டில் ஒரேயொருவர் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் வருமான கண்டதாக தெரிவித்து உள்ளார். அவர் காட்டிய வருமானம் ரூ.721 கோடி ஆகும்.

நாட்டின் 120 கோடி மக்களில் வெறும் 4.07 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் இவர்களிலும் 82 லட்சம் பேர் ரூ.2.5 லட்சத்துக்கு கீழே வருமானம் ஈட்டியதாகவும் (அதாவது வரி செலுத்தாத விதமாக) வருமான வரி இலாகாவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் நாட்டில் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலாக வருமானம் ஈட்டிய தனி நபர்களின் எண்ணிக்கை 48,417. இவர்களது ஒட்டு மொத்த வருமானம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருந்தது.