செய்திகள்

டிரம்பின் தொடரும் பணிநீக்க அதிரடி - தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய புலனாய்வுத்துறை இயக்குனர் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த புலனாய்வுத்துறை இயக்குனர் எஸ்ரா கோஹன்-வாட்னிக்கை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானின் அமெரிக்க கமாண்டரையும் நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

வாஷிங்டன்:

டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பெற்றதில் இருந்து அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பல முக்கிய அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், புலனாய்வு பிரிவு இயக்குனர் எஸ்ரா கோஹன்-வாட்னிக்கை பதவிநீக்கம் செய்வதாக வெள்ளை மாளிகை நேற்று அறிவித்தது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புலனாய்வு பிரிவு இயக்குனராக எஸ்ரா கோஹன்-வாட்னிக் செயல்பட்டு வந்தார். இவர் அதிபர் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றபோது தேசிய பாதுகாப்பு அமைப்பின் புலனாய்வு பிரிவு இயக்குனராக பதவியேற்றார்.

இந்நிலையில், எஸ்ரா கோஹன்-வாட்னிக்கை இயக்குனர் பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்புதுறையில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. அவரை நீக்கியதற்கான காரணத்தை வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை. அவருக்கு அடுத்து என்ன பதவி கொடுக்கப்படும்? என்றும் தெரிவிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் கமாண்டரான நிக்கல்சனையும் பதவிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பொறுப்பேற்றதில் இருந்து தாலிபான்கள் அதிக பலமடைந்துள்ளதால் அவர் நீக்க, டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 19ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் போது நிக்கல்சன் போர்களில் வெற்றி பெறாததால் அவரை பதவிநீக்கம் செய்யுமாறு பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் ஜெனரல் ஜோசப் டன்போர்டிடம் கூறியிருந்ததாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிக்கல்சனை முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா இந்த பதவியில் அமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.