செய்திகள்

நொய்யல் பகுதியில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு

நொய்யல் பகுதியில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப் பாளையம், வேட்டமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பியிரிட்டுள்ளனர்.

இங்கு விலையும் கரும்புகளை விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3700 வரை விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை இயந்திரத்தின்முலம் பல்வேறு படி நிலைகளை கடந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

பின்னர் நன்கு உலரவைத்த சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஸ்ட்ரா, உத்ராஞ்சல், உத்திரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த வாரத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1300க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1300 க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் வியாபாரிகள் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1400-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ரூ.1400-க்கும் வாங்கிச் சென்றனர். வெல்லம் உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் மற்றும் கரும்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.