புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் மாதம் நடந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான ஜூன் 16-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்து, ஜெயபால் ஆகியோர் மருத்துவக்கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் தீர்ப்பு குறித்து பேசினர்.
அவர்களை தொடர்ந்து பேசவிடாமல் மைக் இணைப்பை துண்டித்து சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி மறுத்தார். இதையடுத்து அசோக்ஆனந்து எம்.எல்.ஏ. சபையிலிருந்து வெளியே வந்து தன் காரில் இருந்து மெகா போனை எடுத்து வந்து சபையில் பேசினார். மேலும் சைரனையும் ஒலிக்கச்செய்தார். இதனால் சபையில் அமளி, துமளி ஏற்பட்டது.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் சபாநாயகரிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக்ஆனந்து, ஜெயபால் மீது உரிமை மீறல் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 16-ந்தேதி சட்டசபையில் சபாநாயகர் அனுமதியை மீறி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசை அவதூறாக பேசினர். மெகா போனை எடுத்து வந்து அத்துமீறல் செய்தனர். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த உரிமை மீறல் புகாரை சபாநாயகர் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பினார். இதை ஆய்வு செய்த உரிமை மீறல் குழுவினர் என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் வரும் 29-ந்தேதிக்குள் உரிமை மீறல் குழுவிற்கு இந்த புகார் தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை சட்டமன்ற செயலர் வின்சென்ட்ராயர் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 23-ந்தேதி குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. அன்றைய தினம் 2 எம்.எல்.ஏ.க்களும் சபை நடவடிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.