கோப்பு படம் 
செய்திகள்

பேஸ்புக்கில் குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவிட்ட வடமாநில வாலிபர் கைது

பேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்:

சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் மற்றும் பார்ப்பவர்களை கண்டறிய கூடுதல் ஏ.டி.ஜி.பி ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

அப்போது வாலிபர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் திருப்பூரில் இருப்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்டை சேர்ந்த ஸ்ரீராம் யாதவ்(வயது19) என்பதும், ஊத்துக்குளியில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பேஸ்புக்கில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT