சியோல்:
தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணுகுண்டுகள் பரிசோதனை என உலகை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் வடகொரியா மீது ராணுவ பகை கொண்டுள்ள அமெரிக்கா, எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் இருந்து வருகிறது.
போர் சூழல் முற்றினால் வடகொரியா மீது உடனடியாக அதிரடி தாக்குதல் நடத்துவது எப்படி என அவசரகால போர் தந்திரங்களை அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து வகுத்துருந்தது.
இந்நிலையில், வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினிகளில் ஊடுருவி மேற்கண்ட போர் திட்டங்களை திருடியுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ரீ சோல் ஹீ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ள ரீ சோல் ஹீ, வடகொரியா அரசுதான் திட்டமிட்டு இந்த ஊடுருவலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். சுமார் 235 ஜி.பி அளவுக்கான ஆவணங்கள் வடகொரியாவால் திருடப்பட்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பெண்டகன் செய்திதொடர்பாளர், வடகொரியாவின் எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்கும் விதமாக அமெரிக்காவின் போர் திட்டங்கள் உள்ளதாக கூறினார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.