செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் ராம்நாத் கோவிந்துக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

திரிபுரா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் 2 பேர் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக மாறி இருப்பது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தற்போது ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி அவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்து ஆதரவு திரட்டினார்கள். தற்போது அவர்களது தென்னிந்திய சுற்றுப்பயணம் முடிந்து விட்டது.

இதையடுத்து ராம்நாத் கோவிந்த் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். வருகிற வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்கிறார்.

வியாழக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்படும் ராம்நாத் கோவிந்த் அசாம் தலைநகர் கவுகாத்தியில் தரை இறங்குகிறார். அங்கிருந்து அவர் அருணாசல பிரதேச மாநிலத்துக்கு சென்று பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

பிற்பகல் அசாம் திரும்பும் ராம்நாத் கோவிந்த், கவுகாத்தியில் 4 மாநில எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளார். அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகிய 4 மாநில எம்.எல்.ஏ.க்களை அங்கு அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசி ஆதரவு திரட்டுவார்.

திரிபுரா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மம்தா பானர்ஜியின் உத்தரவை ஏற்காத அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவான தங்கள் முடிவில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் 2 பேர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மேலிட உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக மாறி இருப்பது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பது போல மேகாலயா மாநிலத்திலும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சியின் ஆதரவை பா.ஜ.க. பெற்றுள்ளது.

இது தவிர அம்மாநிலத்தில் உள்ள 15 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநில எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் சந்திப்பு முடிந்த பிறகு அன்றிரவு கவுகாத்தியில் ராம்நாத் கோவிந்த் தங்க உள்ளார். மறுநாள் (7-ந்தேதி) அவர் நாகலாந்து, மணிப்பூர் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 6 சுயேச்சை மேல்-சபை எம்.பி.க்களும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் ராம்நாத் கோவிந்துக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.